நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த காருக்கு வரி விலக்குக் கோரிய, நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் என்ற சொகுசுக்காரினை இறக்குமதி செய்தார் நடிகர் விஜய். அந்தக் காருக்கான இறக்குமதி வரியை விஜய் செலுத்தவில்லை என்பதால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
இதனால் இறக்குமதி செய்த சொகுசுக் காருக்கு, நுழைவு வரியைச் செலுத்த உத்தரவிட்டார் வணிகவரித்துறை உதவி ஆணையர். இதனை எதிர்த்து வரிவிலக்குக் கோரி , நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
காரினை பதிவு செய்யாததால் பயன்படுத்த முடியவில்லை என்று மனு தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.ராம் விசாரித்து, இன்று அந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், வரி விலக்கும் கோரிய நடிகர் விஜய்க்கு அறிவுரை வழங்கியதோடு, அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அந்தத் தீர்ப்பில் "சமூக நீதிக்குப் பாடுபடுவதாகப் பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது. வரி என்பது நன்கொடையல்ல...கட்டாய பங்களிப்பு" என்று கண்டனம் தெரிவித்தோடு நடிகர் விஜய்க்கு 1,00,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அந்த அபராதத் தொகையினை 2 வாரங்களுக்குள் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவின் விட்டுள்ளனர். நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உத்தரவு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக