சார்பட்டா பரம்பரை : திரை விமர்சனம்
குத்துச்சண்டையை மையப்படுத்தி எமர்ஜென்ஸி காலத்தில் சென்னையில் நடந்த நிகழ்வுகளை ஆவணமாக்கி வெளிவந்து இருக்கிறது சார்பட்டா பரம்பரை. பல தலைமுறைகளாக குத்துச்சண்டையில் கோலோச்சி இருக்கும் இருபெரும் பரம்பரைகளுக்கு இடையே இருக்கும் பகைக்கும் , அவர்களுக்கு இடையே இருக்கும் வன்மங்களுக்கும் இடையில் சூழ்நிலையால் வரும் தனியொருவனும், அதனால் அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுமே இந்த சார்பட்டா பரம்பரை.
பாக்ஸிங் வெற்றியை கௌரவமாக நினைக்கும் இடியாப்ப பரம்பரைக்கும், சார்பட்டா பரம்பரைக்கும் பல தலைமுறையாக பகை தொடர்கிறது. ஒரு காலத்தில் புகழுடன் விளங்கிய சார்பட்டா பரம்பரையின் இழந்த புகழை நிலைநாட்ட போராடும் பசுபதிக்கும், தற்போது முதலிடத்தில் இருக்கும் இடியாப்ப பரம்பரைக்கும் நடக்கும் மோதல்கள் நீள்ககறது. இந்த மோதலில் சந்தர்ப்ப சூழ்நிலை கபிலனைத் (ஆர்யா) அதற்குள் தள்ளிவிடுகிறது. சார்பட்டா பரம்பரையின் இழந்த கௌரவத்தை ஆர்யா மீட்டெடுத்தாரா? இல்லையா என்பதை, தனது வழக்கமான குறியீடுகளையும், அக்கால அரசியல் நிலைப்பாட்டையும் இணைந்து தந்திருந்திருக்கிறார் இயக்குனர் பா. இரஞ்சித்.
மிசா சட்ட கால கட்டத்தில் கதை நடப்பதால், அவற்றைக் காட்சியில் கொண்டு வர நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். அன்றைய நிகழ்வுகள், கட்சிகள் என உள்ளதை உள்ளபடியே பதிவு செய்துள்ள பா.இரஞ்சித் ரசிக்க வைத்துள்ளார்.
ஆர்யாவின் திரைப்படங்கள் அவ்வப்போது வெற்றி பெற்றாலும், தனது திறமையை நிரூபிக்கும் விதமான ஒரு கதாபாத்திரத்தை நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்தார். அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறி உள்ளது. இதற்காக அவர் கொடுத்துள்ள உழைப்பு, திரையில் அவரைச் சிறப்பாகக் காட்டுகிறது.
ஆர்யாவுக்கு அடுத்தபடியாக கதையை தாங்கி பிடிப்பவர் பசுபதி. வாத்தியார் ரங்கன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். பல இடங்களில் கண்ணசைவின் மூலமே உணர்வுகளை கடத்தி, தன்னை தமிழ்த்திரையுலகம் இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதை உணரவைக்கிறார்.
இதுவரை பெரும்பாலும் வக்கிரமான வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான் விஜய்க்கு , ஆர்யாவுடன் படம் முழுவதும் வரும் டாடி என்ற கெவின் கதாபாத்திரம். ஆங்கிலோ இண்டியனான அந்த பாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார்.
ஆர்யா எதிர்க்கும் வேம்புலி என்ற பாக்சராக ஜான் கொக்கேன் மற்றும் ஷபீர் கல்லரக்கல் இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள். இரண்டு பக்கத்தில் உள்ளவர்களையும் உசுப்பேத்திக் காசு பார்க்கும் போட்டி அமைப்பாளராக வருகிறார் காளி வெங்கட். டான்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் ஷபீர்.
கபிலனின் மனைவி மாரியம்மாவிற்கு (துஷாரா விஜயன்) நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லையென்றாலும், கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்களுடன் இடியப்ப பரம்பரை வாத்தியாராக ஜிஎம் சுந்தர், கபிலனின் அம்மாவாக அனுபமா குமார், ரங்கன் வாத்தியாரின் மகனாக கலையரசன், பசுபதியின் இன்னொரு நம்பிக்கைக்குரிய சிஷ்யன் சந்தோஷ் பிரதாப், அவருடைய மாமா வேட்டை முத்துக்குமார், பாக்ஸிங் கமெண்ட்ரி செய்யும் பழைய ஜோக் தங்கதுரை, மாஞ்சா கண்ணனாக நடித்துள்ள மாறன், பீடி ராயப்பன் கதாபாத்திரம் என பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இவர்களைத் தாண்டி படத்தை தூக்கி நிறுத்தியிருப்பது கலை இயக்குனர் ராமலிங்கம் தான். எமர்ஜென்சி காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தி ஆவணப்படுத்தி இருக்கிறார். பாக்சிங் நடக்கும் உள்ளரங்க மைதானம், மணிக்கூண்டு, தெருக்கள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிவமைத்து இருக்கிறார். நிச்சயமாக, இதற்காக சில விருதுகளை தட்டிச் செல்வார். பின்ணணி இசையில் மிரட்டியிருக்கும் சந்தோஷ்நாராயணன், பாடல்களில் பெரிதாக ஈர்க்கவில்லை.
இரு பெரும் பரம்பரைகளுக்கு இடையிலான போட்டியாக இருக்கும் கதைக்களம், சார்பட்டா பரம்பரையின் கண்ணோட்டத்திலேயே நகர்வது சற்று குறையாகத் தெரிகிறது. இது இடியாப்ப பரம்பரை போட்டியாளர்களை வில்லன்களாக தோற்றம் தருகிறது. அவர்களின் பாத்திரங்களுக்கும் இன்னும் சற்று வலுசேர்க்கும் காட்சி அமைப்பை சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
முதல் பாதியில் விருவிருப்பாக செல்லும் கதை, இரண்டாவது பாதியில் சற்று தொய்வடைகிறது. கபிலனின் வீழ்ச்சி அவ்வளவாக ஒட்டவில்லை. ஆறேழு மாதங்களுக்குள் நடக்கும் கதையில், குடிகாரனாக மாறும் ஆர்யாவின் தொப்பை, நரைத்த தாடி சற்று நெருடலை உண்டாக்குகிறது. வெற்றிச்செல்வனாக வரும் கலையரசனின் கதாப்பாத்திரம் முழுமையடையாத உணர்வைத் தருகிறது. சார்பட்டா பரம்பரையின் கதையாக இல்லாமல், கபிலனின் வாழ்க்கைப் பயணமாகவே இருக்கிறது.
ஆர்யா, ஜான்விஜய், பசுபதி, ஷபீர் என பலருக்கும் நல்ல வெற்றியைப் பதிவு செய்திருக்கும் சார்பட்டா பரம்பரை தியேட்டரில் வெளிவந்து இருந்தால் கொண்டாடப்பட்டிருக்கும்.
உங்கள் கருத்தை பதிவிடுக