சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மகப்பேறு மருத்துவர் நியமிப்பதுடன், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை தாலுகா தலைமையிட அரசு மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை நம்பி சாத்தான் குளம் தாலுகா பகுதியில் உள்ள 29 கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மகப்பேறு மருத்துவர் இருந்து வந்தார். இதன் மூலம் சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பெரிது பயனடைந்து வந்தனர். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்கான அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் தற்போது மகப்பேறு மருத்துவர் பதவி உயர்வு மூலம் வேறு மருத்துவமனைக்கு சென்று விட்டார். அதன்பின் மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்படவில்லை. வாரம் ஒரு முறை மகப்பேறு மருத்துவர் ஒருவர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற நாட்களில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் திருச்செந்தூர் தூத்துக்குடி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மகப்பேறு மருத்துவர் நியமிக்க கோரி உயர் அதிகாரிகளுக்கும் மனு செய்தால் அவர்கள் மகப்பேறு மருத்துவர் பற்றாக்குறையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள், ஏழை கர்ப்பிணி பெண்கள் நிலையறிந்து சாத்தான்குளம் மருத்துவமனைக்கு நிரந்தரமாக மகப்பேறு மருத்துவர் நியமிக்குமாறு வலியுறுத்தி வந்தும் அவை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் கண்டுகொள்வதில்லை. கடந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்திலும் சரி இது போன்ற நிலை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு இருந்ததில்லை. ஆதலால் அரசு துரிதமாக செயல்பட்டு அரசு மருத்துவமனையின் உயிர் நாடியான மகப்பேறு மருத்துவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமாயின் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார். அப்போது சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயலாளர் அச்சம்பாடு சௌந்தரபாண்டி, புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பால மேனன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக