சாத்தான்குளம்: தட்டார்மடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பொற்செல்வன் ஆகியோர் உத்தரவின் படி தட்டார்மடம் புனித அன்னாள் துவக்கப்பள்ளியில் வைத்து நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் சபிதா தலைமை வகித்து துவங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான்சன் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் லட்சுமி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஐலின் சுமதி முகாமில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் திட்ட விளக்க உரை ஆற்றினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆனந்த குமார் வாழ்த்திப் பேசினர்.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் முதலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் 14 மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இசிஜி பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, பல், கண் மருத்துவ சிகிச்சை ,பொது மருத்துவம், ரத்த சோகை, நீரிழிவு நோய், இரைப்பை மற்றும் குடல் நோய், பால்வினை நோய், இதயம், தோல் ,காது மூக்கு தொண்டை ,மகளிர் நலம், மகப்பேறு குழந்தைகள் நலம், மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மருந்துகளும், மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க ப்பட்டது.

இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, கொழுப்பின் அளவு, சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, சிறு நீரில் உப்பு சர்க்கரை அளவு, மலேரியா ரத்த தடவல் போன்றவை பரிசோதிக்கப்பட்டது.கண்புரை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டதுடன் பரிசோதனையும் செய்யப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்பட்டது. தொற்றா நோய்கள் சிறப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டது, மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிய சிறப்பு பரிசோதனை செய்யப்பட்டது. தகுதியுள்ள நபர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தினில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். தமிழக முதலமைச்சரின் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 1243 நபர்கள் பங்குபெற்று பயன்பெற்றனர். 14 நபர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். சுகாதார ஆய்வாளர் மந்திர ராஜன் நன்றி கூறினார். மருத்துவ அலுவலர்கள் மெரின் வசந்தரூபா,சுவாதி, அருள் சாமுவேல், சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர் லட்சுமி, சுகாதார ஆய்வாளர் மந்திர ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக