தூத்துக்குடி மாவட்டம், கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மாதிரி பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து கலந்துரையாடினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அப்போது இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. எனவே நீங்கள் எங்களை தொல்லியல் சார்ந்து நமது பண்பாடு சார்ந்து இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கனிமொழி எம்.பியிடம் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
நிச்சயம் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த கனிமொழி இன்று அவர்களின் ஆசையை நிறைவேற்றினார்.
இதற்காக இன்று கீழவல்லநாடு மாவட்ட மாதிரி பள்ளிக்கு சென்றார். அங்கிருந்து 4 பேருந்துகள் மூலம் 200 மாணவ மாணவிகளை ஆதிச்சநல்லூருக்கு அழைத்து வந்தார். அப்போது அந்த பேருந்துகளில் மாணவ மாணவிகளுடன் பயணம் செய்தார்.

ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்த மாணவிகளுக்கு மத்திய தொல்லியல் துறை அலுவலர் முத்துக்குமார் கனிமொழி எம்.பி. முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் குறித்தும், அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், தொல்லியல் பொருட்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட சைட் மியூசியத்தினை பார்வையிட்ட மாணவ மாணவிகள் அதைத் தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் உலகத்தரத்தில் உருவாக்கப்பட உள்ள அருங்காட்சியகத்தின் மாதிரியை பார்வையிட்டனர். அதன்பின்னர் சி சைட்டில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தையும் அதில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டனர்.
அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகள் சுற்றுலா சென்றதே கிடையாது என்று கூறியதால் தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் ஆதிச்சநல்லூர் அழைத்து வந்ததற்கான தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக