சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக்கு உள்பட்ட தச்சன்விளை கிராமத்தில் அதிகமான மாணவ, மாணவிகள் அருகில் உள்ள குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்று வர உரிய பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.
இதனையடுத்து ஊர் பொதுமக்கள் ஊராட்சித் தலைவர் தினேஷ்ராஜசிங்கிடம் வலியுறுத்தினர். அவர் தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி சட்டபேரவை தலைவர் , திசையன்விளையில் இருந்து தச்சன்விளை, குட்டம் சென்று வரும் வகையில் அரசு பேருந்து இயக்கிட வலியுறுத்தியதையடுத்து செவ்வாய்க்கிழமை திசையன்விளையில் இருந்து தச்சன்விளை, பூச்சிக்காடு, அதிசயபுரம், மேட்டுவிளை, புத்தன்தருவை, குட்டம், கூடுதாழை, கூட்டப்பணைவிலக்கு , உவரி , இடையன்குடி வழியாக மீண்டும் திசையன்விளைக்கு வந்து சேரும் வகையில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் வசதிக்காக இயக்கப்பட்ட அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை காலை தச்சன்விளை கிராமத்திற்கு வந்தது.
இதையடுத்து ஊராட்சித் தலைவர் தினேஷ்ராஜசிங் தலைமையில் ஊர் மக்கள், மாணவ, மாணவிகள் அரசு பேருந்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். டிரைவர், கண்டக்டர் கௌரவிக்கப்பட்டனர். இதில் ஊராட்சி துணைத் தலைவர் முருகேஸ்வரி, தச்சன்விளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொம்மை ரெக்ஸ்லின், குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெஞ்சமின், தச்சன்விளை திமுக கிளை செயலாளர் ராஜ்குமார், மற்றும் முருகேசன், சுரேஷ், விக்னேஷ், உள்ளிட்ட பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட நாள் கோரிக்கை ஏற்று பேருந்து வசதி இல்லாத கிரரமத்திற்கு அரசு பேருந்து சேவை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு சட்டபேரவை அப்பாவு, ஊராட்சித் தலைவர் தினேஷ்ராஜசிங்கிற்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டியும் உள்ளனர்.

இதேபோல் புதிய அரசு பேருந்திற்கு சமூக ஆர்வலர் பி..ஏ . பாலகிருஷ்ணன் தலைமையிலும் மற்றொரு இடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.



உங்கள் கருத்தை பதிவிடுக