தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம் கிராமம் கிழக்குத்தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் உமையணன்(72). இவர் கடந்த 6 ஆண்டுகளாக 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் திறந்துவிடும் பணியைச் செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, முத்தையாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வந்த உமையணன் இரண்டு ஆண்டுகளாகவே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று இரவு தனது நெஞ்சுவலி இருப்பதாக தனது குடும்பத்தினரிடம் உமையணன் கூறியுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை 5 மணியளவில் அரியநாயகிபுரம் கிராமத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக வந்திருந்த உமயணனுக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக உமையணன் தனது பேரனுக்கு செல்போன் மூலம் அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த உமையணனின் பேரன் அவரது இருசக்கர வாகனத்தில் கடும் நெஞ்சு வலியால் துடித்த உமையணனை அழைத்துக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியிலேயே உமையணன் கடும் நெஞ்சுவலி தாங்காமல் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து உயிரிழந்த முதியவர் உமையணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக