சாத்தான்குளம், முதலூரில் யானைக்கால் நோயை ஆரம்ப நிலையிலே கண்டறிய சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பொற்செல்வன் ஆகியோர் உத்தரவின் பேரில் ஆரம்ப நிலையிலே யானைக்கால் நோயினைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கில், மாவட்ட பூச்சியில் வல்லுநர் ஆனந்தன் வழிகாட்டுதலின்படி, வெளி மாநிலங்களிலிருந்து வந்து முதலூர் பகுதிகளில் உள்ள இனிப்பகம் மற்றும் கட்டிட தொழிலில் தங்கி பணிபுரியும் பணியாளர்களுக்கு இரவு நேர யானைக்கால் நோய் இரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஐலின் சுமதி, சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஜேஜே ஸ்வீட்ஸ் மேலாளர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார். ஆய்வக நுட்பனர்கள் சத்தியகலா, வேலம்மாள், அணிலா, சுகாதார ஆய்வாளர் அருண் ஆகியோர் ரத்த தடவல் மாதிரிகளை சேகரித்தனர். இது குறித்து சுகாதாரத் துறையினர் தெரிவித்ததாவது
யானைக்கால் நோயானது கியூலெக்ஸ் வகை கொசுக்கள் மூலம் மனித உடலில் ஃபைலேரியாசிஸ் புழுக்கள் நிணநீர்களில் வளர்ந்து கால்கள் மற்றும் உறுப்புகளை வீக்கமடைய செய்கிறது. நோயின் அறிகுறிகள் தென்படுவதற்கு ஆறு ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் இதனை ஆரம்ப நிலையிலே கண்டறிய இந்த முகாம்கள் சுகாதாரத் துறை மூலம் நடத்தப்படுவதாகவும், யானைக்கால் மைக்ரோ ஃபைலேரியா கிருமிகள், பகல் நேரங்களில் நிணநீர் முடிச்சி பகுதிகளில் தங்கி விடுவதாகவும் இரவு 9 மணிக்கு மேல் இரத்தத்தில் காணப்படுவதால் இரவு நேரங்களில் பரிசோதனைக்காக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து வெளி மாநில தொழிலாளர்கள் தங்கிப் பணி புரியும் இடங்களில் இந்த வகை முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக