ஆக்கிரமிப்பை அகற்றியதும் ஜேசிபி இயந்திரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், நாசரேத் செல்லும் சாலை, குயில் நின்றார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்ததால் பேரூராட்சி நிர்வாகத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக ஏரல் தாலுகா அலுவலகத்தில் நேற்றைய தினம் ஆழ்வார்திருநகரி வியாபாரிகளோடு வட்டாட்சியர் கோபால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வருவாய்த்துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் போலீசார் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிக அளவில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்ந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடுதல் அவகாசம் தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வியாபாரிகளுக்கு போதுமான அவகாசம் பேரூராட்சி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் ஆழ்வார்திருநகரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும் போது தனியார் காம்ப்ளக்ஸ் கடை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்தினர் முயன்ற போது காம்ப்ளக்ஸ் உரிமையாளர் குடும்பத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பேரூராட்சி நிர்வாகத்தினர் கடைகள் முன்பு இருந்த படிகளை அகற்ற முயன்றபோது ஜேசிபி வாகனம் முன்பு குடும்பத்தோடு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரசு பணியினை செய்ய விடாமல் தடுத்ததாக பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன் (பொறுப்பு) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
உங்கள் கருத்தை பதிவிடுக