தமிழகத்திற்கு இவ்வளவு கடனா? : நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக அரசு விட்டுச்சென்ற கடன்சுமை குறித்த நிதிநிலைவெள்ளை அறிக்கையை வெளியிட்டார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அந்த அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மேலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் தொகை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் `அரசின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்' என்பதை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தது. தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று ஆட்சியமைத்த தி.மு.க அரசு கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தினாலும், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயார் செய்யும் பணிகளில் அதிகாரிகளை முடுக்கி விட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், `` இது என் பெயரில் வெளியிடுகிற அறிக்கையே தவிர, இதற்கு பல வகைகளில் பலரும் வழிகாட்டியாக இருந்தனர். முதலமைச்சர் காட்டிய பாதையில் வெளிவந்த அறிக்கை இது. முதலமைச்சரும் அவரது செயலர்களும் பல திருத்தங்களைக் கூறியதன் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்காக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், இணைச் செயலர், சிறப்புச் செயலர்கள் ஆகியோர் பல நாள்கள் முயற்சி எடுத்து உழைத்து இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
மேலும் " வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு பலரும் உதவி செய்தனர். அறிக்கை தயார் செய்வதற்கு முன் ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும், 2001ல் அதிமுக அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையையும் ஆய்வு செய்தோம். இணையதளத்திலும் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம். வரும் வெள்ளிக்கிழமை வெளியிட உள்ள தமிழக பட்ஜெட்டில் முழுமையான திட்டங்களை வெளியிடுவோம். அதன்பின் தான் திமுக.,வின் புதிய திட்டங்கள் குறித்து தெரியும்." என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி " இந்த அறிக்கையானது, எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்டதை ஆளும்கட்சியாக வந்த பிறகு ஒளித்து வைக்காமல் வெளியிடுவதை எங்கள் அடையாளமாக இருக்க வேண்டும்' என முதலமைச்சர் கூறியதன்படி, எங்கள் தத்துவத்தையும் குணத்தையும் வெளிப்படுத்துவதற்காக வெளியிடப்படுகிறது " என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
2016-21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையே ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்துவிட்டது. இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலமும் இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. மேலும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசின் வருவாய் 4ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது.
தமிழகம் வாங்கியுள்ள கடன் தொகை
கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உபரியாக இருந்த தமிழக அரசின் வருமானம், கடந்த அதிமுகவின் 10 ஆண்டு கால 2011-21 ஆட்சியில் பற்றாக்குறையாக மாறி உள்ளது. 2020-21 நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் 2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.5,70,189 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை :
1999-2000 - ரூ.18,989 கோடி
2000-2001 - ரூ.28,685 கோடி
2001-2002 - ரூ.34,540 கோடி
2005-2006 - ரூ.50,625 கோடி
2011-2012 - ரூ.1,03,999 கோடி
2015-2016 - ரூ.2,11,483 கோடி
2017-2018 - ரூ.3,14,366 கோடி
2020-2021 - ரூ.4,56,660 கோடி
2021 - ரூ.4,85,502 கோடி
தமிழகத்தின் வருமானம் பெருமளவு சரிந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ குடிநீர் வாரியம் போன்றவை பெரும் சரிவை சந்தித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் சரியாக இருந்த வருவாய் மேலாண்மை, அதன் பிறகு தலைகீழாக மாறியுள்ளது. அப்போதே 17,000 கோடி அளவுக்கு இருந்த வருவாய் பற்றாக்குறை தற்போது 1 லட்சத்து 50,000 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாததால், பிற மாநிலங்களை விட இங்கு குறைவாக உள்ளது. பூஜ்ய வரியால் பணக்காரர்கள் மட்டுமே பயனடைகிறார்கள். பெரும் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்து ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு அதிகரித்திருப்பது ஏழைகளைப் பாதிக்கும். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி உள்ளது.
பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32ல் 31.50ரூபாயை மத்திய அரசு எடுத்துக் கொண்டு வெறும் 50 பைசாவை மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கு கொடுக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியம், குடிநீர் வாரியத்துக்கு ரூ.1,743 கோடி பாக்கி வைத்துள்ளன. ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதில் மின்வாரியத்துக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. போக்குவரத்துத்துறைக்கு ஒவ்வொரு கி.மீ.,க்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து துறையின் கடன் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி செலுத்தி வருகிறது.
இவ்வாறு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக