கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நீடிக்கும் கனமழை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையினால் தமிழகம் முழுவதும் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்நிலைகள் பெருகி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக அதிகரித்துள்ளதால், அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கோதையாறு, வள்ளியாறு, பழையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு ஆகியவற்றால் நீர் கரைபுரண்டு ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது.
தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகலில் இருந்து மீண்டும் இடைவிடாது பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
தொடர் மழை காரணமாக இன்றும் (சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
உங்கள் கருத்தை பதிவிடுக