இந்தியா "த்ரில்" வெற்றி : நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதாலாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூர் ஜவாய் மார்பிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
கோஹ்லி, பும்ரா, ஜடேஜா உட்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், புதிய டி20 கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்காக புதிய நட்சத்திரம் வெங்கடேஷ் ஐயர் அறிமுகம் ஆனார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல், முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் அணியில் மீண்டும் இடம் பிடித்தனர்.
நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் ஓய்வில் இருக்க சவுத்தி கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற ரோகித் நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். முதலில் களமிறங்கிய அந்த அணிக்கு புவனேஸ்வர் குமார் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். உலகக்கோப்பையில் அசத்திய மிச்செலை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
பின்னர் களமிறங்கிய சாப்மன் மற்றும் காப்டில் நிதானமாகத் தொடங்கினாலும், பின்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இரண்டாவது விக்கெட்டிற்கு இருவரும் 109 ரன்கள் சேர்த்தனர். சாப்மன் மற்றும் காப்டிக் அவுட்டான பிறகு தடுமாறிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக விளையாடிய கப்தில் 42 பந்துகளில் 3 ஃபோர்ஸ் 4 சிக்ஸருடன் 70 ரன்களும், சாப்மேன் 50 பந்துகளில் 6 ஃபோர்ஸ் 2 சிக்ஸருடன் 62 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய புவி, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கினர்.
165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ராகுல் மற்றும் ரோகித் 5 ஓவர்களில் அதிரடியாக 50 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ராகுல் துரதிஷ்டவசமாக அவுட் ஆனாலும், அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஒருவழியாக இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் ரோகித் 36 பந்துகளில் (5x4 ,2x6)48 ரன்களும், சூர்ய குமார் 40 பந்துகளில் (6x4, 3x6) 62 ரன்களும் எடுத்தனர். சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
உங்கள் கருத்தை பதிவிடுக