சையத் முஸ்டாக் அலி டி20 கோப்பை: தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி
சையத் முஸ்டாக் அலி டி20 கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
உள்ளூர் டி20 தொடரான சையத் முஸ்டாக் அலியின் நாக்அவுட் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, சரவணக்குமாரின் சிறப்பான பந்துவீச்சில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சரவணக்குமார் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். முருகன் மற்றும் முகமத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
எளிய இலக்கை விரட்டிய தமிழக அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் சாய் சுதர்சன்(34 ரன்) மற்றும் கேப்டன் விஜய் சங்கர் (43 ரன்) எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் தொடர்ச்சியாக 3 வது முறையாக தமிழ்நாடு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி தொடக்கம் முதலே அதிரடியாக ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் அடித்த நிலையில் ரோகன் கதம் (87) மற்றும் கேப்டன் மனிஷ் பாண்டே (54) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த கர்நாடகா அணி 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரை வீசிய தர்ஷன் நல்கண்டே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இலக்கை துரத்திய விதர்பா அணி அதிரடியாக ஆடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டி நவம்பர் 22 திங்கட்கிழமையன்று பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. அதில் 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்நாடகா கோப்பையை தக்க வைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது
உங்கள் கருத்தை பதிவிடுக