டி20 தொடர் : நியூசிலாந்தை துவம்சம் செய்து கோப்பையை வென்ற இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ராகுலுக்குப் பதிலாக களமிறங்கிய இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த ரோகித் நியூசிலாந்து பந்து வீச்சை பவுண்ட்ரிகளாக பறக்க விட்டார். இந்த ஜோடி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தது.
அடுத்து பந்து வீசிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 3 இந்திய பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கி வெளியேற்றினார். ரோகித் சர்மாவும்(56) அரைசதம் அடித்த கையோடு வெளியேற, இந்திய அணி 11.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ்(25), வெங்கடேஷ்(20), ஹர்ஷல்(18), தீபக் சாஹர்(21) ஆகியோர் சிறப்பாக விளையாட இந்திய அணி 20 ஓவர்களில் 7விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.
185 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அதிரடியாகத் தொடங்கியது. ஆனால் அக்சர் பட்டேல் இரண்டு ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, நியூசிலாந்து அணி சரியத் தொடங்கியது.
நியூசிலாந்து அணியின் கப்தில் மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் (51) அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேற 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் ஆனது.
இதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் (3-9) ஆட்டநாயகனாகவும், மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் உட்பட சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25ல் தொடங்குகிறது.
உங்கள் கருத்தை பதிவிடுக