ரிஷப் பண்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதி - இந்திய அணிக்கு பின்னடைவு
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில், நட்சத்திர வீரர் ரிஷாப் பண்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நியுசிலாந்து அணியிடம் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப்பை இழந்த இந்திய அணி, அடுத்த மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
போட்டிக்கு அதிக நாட்கள் இருப்பதால், இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு வளையம் என்று சொல்லப்படும் பயோ பப்புள் விதிகள் தளர்த்தப்பட்டது. இதனால் வீரர்கள் சிலர், யூரோ கோப்பைக் கால்பந்து போட்டிகளை நேரில் சென்று இரசித்தனர்.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் போட்டிக்கு தயாராவதற்காக மீண்டும் அழைக்கப்பட்டனர். அதற்காக அவர்களுக்கு கொரோனாத் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பண்ட்டை டர்காம் செல்லும் இந்திய அணியில் இணையாமல், 20 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். தற்போது பண்ட் தன்னைத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷாப் பண்ட் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. பண்ட்டின் விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். அவருக்கு மாற்று வீரராக ராகுல் அல்லது சாஹா இருவரில் ஒருவர், விக்கெட் கீப்பராகக் களமிறங்குவார்கள்.
கடந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில், ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதமடித்து சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
உங்கள் கருத்தை பதிவிடுக