டி20 உலகக் கோப்பை 2021: இந்தியா-பாகிஸ்தான் மோதல் - ரசிகர்கள் மகிழ்ச்சி
2021ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரின் குழு விவரங்களை, போட்டியை நடத்தும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது போட்டியின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்த வருட உலகக் கோப்பை டி20 போட்டிக்கான பிரிவுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. சூப்பர் 12 என்றழைக்கப்படும் இந்த சுற்றில், ஒரு பிரிவிற்கு 6 அணிகள் வீதம், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதிபெற்ற டாப்8 அணிகளோடு லீக் சுற்றின் வெற்றி பெற்ற அணிகள் புள்ளிகளின் அடிப்படையில் சூப்பர்12 தொடருக்கு தகுதி பெறும்.


லீக் சுற்று ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீலங்கா, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பப்பூவா & நியூ கினியா மற்றும் ஓமன் அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இதில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 பிரிவுக்கு தகுதி பெறும்.

சூப்பர் லீக் தொடரின் குரூப்1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் , லீக் சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பெற்ற ஏ1 அணியும், பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பி2 அணியும் இடம் பெறும்.
அதே போல் குரூப்2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன், லீக் தொடரில் பிரிவில் முதலிடம் பிடித்த பி1 அணியும் , ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த ஏ2 அணியும் இடம் பெறும்.

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் போட்டிகள் நவம்பர் 14 அன்று முடிவடைகிறது.
பரம விரோதிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவது உறுதியாகி இருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படும்.
உங்கள் கருத்தை பதிவிடுக