முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அறிவிக்க தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை பொதுமக்களுக்கு அறிவிக்க தனி இணையதளம் அறிமுகம் செய்து வைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக நிதிஅமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளத்தை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையினை வெளிப்படையாக அறிவிக்கவே இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மே மாதம் 7ம் தேதிக்கு பிறகு வரும் நிதியை தனிக்கணக்காகவும், அதற்கு முன்பு (மே 6 - கடந்த ஆட்சியில்) வந்த நிதியை தனிக்கணக்காக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் முதலைமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்துவதை எளிதாக்குவதுடன், அதன் செலவு விவரங்களை அனைவரும் இத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கேரளாவில் நடைமுறையில் உள்ள இம்முறை, அங்கு சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் அம்முறையில் வெளிப்படையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதன்மூலம் முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு வரும் நிதியின் அனைத்து விவரங்களும் இணையதளத்தில் இடம்பெறும். மே7ம் தேதி முதல் நேற்றுவரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.472.62 கோடி வந்துள்ளதாகவும், அதில் ரூ.241 கோடி கொரோனா தடுப்பு நடைவடிக்கைகளுக்காக இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நிவாரண நிதியான பிஎம்கேர்ஸ் கணக்கில் வெளிப்படைத் தன்மை இல்லை என் விமர்சித்த அவர், தமிழ்நாடு பட்ஜெட் தாக்களுக்கு முன்பாக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்
உங்கள் கருத்தை பதிவிடுக