
தமிழகத்திற்கு புது கவர்னர் - ரேசில் இருப்பவர்கள் யார்??
தமிழகம் உட்பட சில சில மாநிலங்களில் ஆளுநர் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. அதில் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு, மாநில கவர்னர் பொறுப்பு வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சராகப் பதவி வகித்த இருந்த ரவிசங்கர் பிரசாத், தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பாகவே 8 மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் மாற்றி உத்தரவிட்டார். அதில் தமிழக ஆளுநரும் மாற்றப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த முதல் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. இப்போது இரண்டாவது பட்டியல் தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அவசர அழைப்பு வர, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று டெல்லிக்கு விரைந்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து பேசிய அவர், குடியரசுத்தலைவரையும் அவரது மாளிகையில் சந்தித்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைஆகியோரை, இன்று மாலை சந்திக்க உள்ளார். இதனால் புதிய கவர்னர் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகத்திற்குப் பதிலாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திற்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வழங்கப்படலாம் என செய்திகள் கசிந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்திரசிங்கும் பெயரும் தமிழக ஆளுநர் பந்தயத்தில் அடிபடுகிறது.
ஆளுநர் பன்வாரிலால் மத்திய அரசின் உத்தரவினால் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, கடந்த ஆட்சியில் சர்ச்சையைக் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியின் கூட்டணியில் பாஜகவும் இருந்ததால்,பெரிய அரசியல் நகர்வுகள் எதையும் செய்யவில்லை. ஆனால் இப்போது திமுக ஆட்சியைப் பிடித்து இருப்பதால், ஆளுநர் மாற்றத்தில் தொடங்கி பல அதிரடி நகர்வுகள் விரைவில் நடக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
தெலுங்கானா மாநிலத்தின் கவர்னரான தமிழிசை சௌந்திரராஜன், கூடுதல் பொறுப்பாக பாண்டிச்சேரியின் துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதனால் புதுச்சேரிக்கும் புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
உங்கள் கருத்தை பதிவிடுக