சென்னையில் இன்று தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் : சேலம் ஸ்பார்ட்டன்ஸ் கோவை கிங்ஸ் மோதல்
நம்ம ஊரு நம்ம கெத்து என்ற ஹேஷ் டாக்குடன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி.என்.பி.எல்-5 டி20 தொடர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் முதல் போட்டியில் களமிறங்குகின்றன.
ஐபிஎல்லைப் போல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டிஎன்பிஎல் என்ற டி20 கிரிக்கெட் தொடரை கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த இந்தத் தொடர், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. பிசிசிஐயின் வடிகாட்டுதலின்படி, இன்று தொடங்க இருக்கிறது.
எட்டு அணிகள் பங்கேற்றுப் இந்தத் தொடர், பல இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் களமாக விளங்கி வருகிறது. இந்தத் தொடரை ஐபிஎல் அணி நிர்வாகிகள் கண்காணித்து வருகின்றனர். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பலர் ஐபிஎல் அணிகளுக்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். அதன் மூலம் இந்திய அணியின் தேர்வாகும் வாய்ப்புகளும் அமைகிறது.

கடந்த தொடரில் ஆடிய காரைக்குடி காளை, டூட்டி பாட்ரியாட்ஸ் மற்றும் திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் விலகியதால், புதிதாக நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் இணைந்துள்ளன. இந்த அணிகளுடன், சேப்பாக் கில்லீஸ், திண்டுக்கல் ட்ராகன், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகளும் ஆட உள்ளன.
நடராஜன், வருண் சக்கரவர்த்தி, ஷாருக்கான், கிஷோர், சித்தார்த் மணிமாறன், ஜெகதீசன் போன்றவர்கள் டிஎன்பிஎல் தொடர் மூலம் ஐபிஎலில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதில் சிறப்பாகச் செயல்பட்ட நடராஜன் மற்றும் வருண் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு நட்சத்திர வீரர்களான ரவி அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், வருண் ஆகியோர் இந்திய அணியுடன் இருப்பதால், இந்தத் தொடரில் ஆடவில்லை.
இன்றைய முதல் போட்டியில் டேரில் பெர்ராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், ஐபிஎல்லில் அசத்திய நட்சத்திர வீரர் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. சேலம் அணியில் விஜய் சங்கர், பெரியசாமி மற்றும் முருகன் அஸ்வின் விளையாடுகிறார்கள்.
இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
உங்கள் கருத்தை பதிவிடுக