டிஎன்பிஎல்லில் வெளிநாட்டு வீரர்களாக கெத்துக் காட்டும் நம்ம பசங்க - நம்ம ஊரு நம்ம கெத்து
கிரிக்கெட் என்பது பெருநகரங்களில் உள்ளவர்களுக்கான விளையாட்டு என்பது மாறி, சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து நிறைய திறமையான வீரர்கள் வெளிவரத் தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது ஐபி எல் கிரிக்கெட் தொடர் என்பது நிதர்சனமான உண்மை.
ஹர்திக் பாண்டியா, பும்ரா, நடராஜன், அப்துல் சமாத் என ஐபிஎல் கண்டெடுத்த வீரர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு தேர்வாகலாம் என்று புதிய பாதை அமைந்து இருக்கிறது. இது பல இளம் வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது. ஐபிஎல் அணியினரும் தங்களது குழுவை நாடு முழுவதும் அனுப்பி நல்ல திறமையான வீரர்களைக் கண்டறியும் பணியில் களமிறங்கி இருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து நிறைய வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு தேர்வாகி வருகிறார்கள். அதற்கு சரியான படிக்கல்லாக அமைந்திருக்கிறது டிஎன்பிஎல் என்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர். தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் அசத்தும் வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. நடராஜன், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷாருக்கான் ஆகியோர் பெரிய தொகைக்கு வாங்க பல அணிகள் போட்டி போட்டன என்பதே இதற்கான சான்றாகும்.
நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்தத் தொடர், கடந்த ஆண்டு கொரோனாவால் நடைபெறவில்லை. இந்த ஆண்டு சரியான வழிமுறைகளுடன், சென்னை சேப்பாக்கில் நடந்து வரும் இத்தொடரில் பல இளம் வீரர்கள் அசத்தி வருகின்றனர். அவர்களின் அபார ஆட்டத்தை பார்த்த வர்ணனையாளர்கள், மிகப்பெரிய வீரர்களுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சில வீரர்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சாய் சுதர்சன்
லைகா கோவை கிங்ஸ்க்காக ஆடிவரும் இளம்நட்சத்திரம் சாய் சுதர்சன். சென்னை சூப்பர் கிங்ஸின் பட்டறையில் இளம் வீரராக பட்டை தீட்டப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த வைரம், தனது முதல் தொடரிலியே மின்னத் தொடங்கியுள்ளது. 19 வயது இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், இந்தத் தொடரில் அசத்தி வருகிறார்.
எதிரணி பந்துவீச்சாளர்களை சிக்ஸர் பவுண்ட்ரி என துவம்சம் செய்வதோடு மட்டுமின்றி, ஒன்று இரண்டு என சேர்ப்பதிலும் வல்லவராக இருக்கும் இவர், இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஏறத்தாழ 300 ரன்களை குவித்து இருக்கிறார். 5 போட்டிகளில் 4 அரைசதம் அடித்துள்ள இவரின் குறைந்த பட்ச ஸ்கோர் 40* ஆகும். இவரது ஸ்டிரைக்ரேட்டும் 150க்கு மேல் இருப்பது சிறப்பம்சமாகும்.

ரிஸ்க் அதிகம் எடுக்காமல் கன்சிஸ்டென்டாக ரன் குவிக்கும் இவரது இந்த ஆட்டத்திறன் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மிஸ்டர் கிரிக்கெட் மைக்கேல் ஹசியை ஒத்திருப்பதாக பலரும் தெரிவித்து வருவது இந்த இளம்கன்றுக்கு கிடைத்த மகுடமாகும். இதைத் தொடரும் பட்சத்தில் இவரின் அதிரடி ஆட்டத்தை விரைவில் ஐபிஎல்லிலும் காணலாம்.
ஹரிஷ் குமார் :
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடி வரும் ஆல்ரவுண்டர் ஹரிஷ் குமார். மிதவேகப் பந்துவீச்சாளரான இவர், அதிரடியாக ரன்களைக் குவிக்கும் திறன் கொண்டவர். லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக ரன்களைக் குவிக்கும் இவர், எளிதாக சிக்சர்கள் அடிக்கும் பலசாலியாகவும் விளங்குகிறார்.

இவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் களத்தில் இவரது செயல்பாடு, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல்லை ஒத்திருக்கிறது. இயல்பாகவே பெரிய சிக்சர்கள் அடிக்கும் ஆற்றல் இருந்தாலும், அதை இன்னும் மெருகேற்றினால் ஒரு சில ஐபிஎல் அணிகளின் தேர்வாக இருப்பார்.
பெரியசாமி :
சேலத்திலிருந்து புறப்பட்டு இந்திய அணிக்குள் நுழைந்து பலருக்கும் உந்துசக்தியாக மாறியவர் நடராஜன். அவரது அகாடமியில் இருந்து வெளிவந்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி. கடந்த டிஎன்பிஎல் தொடரில் சென்னை சேப்பாக் கில்லீஸ் கோப்பையை வெல்ல முக்கிய காரணம் இவரது பந்துவீச்சே ஆகும். அந்த தொடரில் அசத்தி தொடர் நாயகன் விருதை வென்றதோடு, இறுதிப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி ஆட்டநாயனாக ஜொலித்தார்.
இவரது ஆற்றலைப் பார்த்து தினேஷ் கார்த்திக் ஆடும் கொல்கொத்தா அணி இவரை நெட் பவுலராக பயன்படுத்தி வருகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கும் பெரியசாமிக்கு, அம்மைநோயால் ஒரு கண்பார்வை பறிபோனது. ஆயினும் தன்னம்பிக்கையால் வளர்ந்து வரும் இவர், சேலத்து ஸ்லிங்கா என்று அழைக்கப்படுகிறார்.

இலங்கை அணியின் லசித் மலிங்காவை தனது இன்ஸ்பிரேஷனாக நினைத்து, அவரைப் போலவே பந்துவீசி அசத்தி வருகிறார். லசித் மலிங்காவின் அளவிற்கு வேகம் இல்லையென்றாலும், அவரைப் போல யார்க்கர், ஸ்லோவ்பால் என வெரைட்டியாக பந்து வீசி வரும் இந்த சேலத்து மலிங்கா, டிஎன்பிஎல் தொடரில் இதுவரை எல்லா போட்டிகளிலும் குறைந்தது ஒரு விக்கெட்டாவது எடுத்து அசத்தி வருகிறார்.
ஷாருக்கான் :
லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான், இந்த ஆண்டு ஐபிஎல்லில் 5 கோடிக்கு மேல் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட இளம்வீரர் ஆவார். அனில் கும்ப்ளே உள்ளிட்ட முன்னணி ஜாம்பவன்களே இவரது ஸ்ட்ரைக்கிங் ஆற்றலைப் பார்த்து வியந்து, எதிர்காலத்தில் இந்தியா அணியின் பொலார்டாக வருவார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அணிக்காக ஆடிவரும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸின் அங்கமான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பட்டறையில் இருந்து வெளிவந்த நட்சத்திரம் ஆவார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொலார்டைப் போல, ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்கும் ஆற்றல் படைத்தவர். பெரிய சிக்சர்களை அடிக்கும் ஷாருக்கான், ஒன்றிரண்டு ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார். சிறந்த பினிஷராக மெருகேறி வரும் இந்த நட்சத்திரம், இந்திய அணிக்காக வெற்றிகளைத் தேடித்தர வேண்டுமென்பதே பலரின் ஆசையாக உள்ளது.
விவேக் :
ஆயிரம் சிக்சர்களை அடித்த கெயில்லே பாராட்டிய வீரர் விவேக்ராஜ். திண்டுக்கல் அணிக்காக ஆடி வரும் விவேக் கெயில்லைப் போன்று கிரிஸுக்குள் நின்றபடி பிரமாண்ட சிக்சர்களை அடித்து அசத்தி வருகிறார். ஆட்டத்தின் எந்த நேரத்திலும் எந்த பவுலரின் பந்தையும் நெடுந்தூரம் விளாசி பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இவர் தனது கன்சிஸ்டென்சியில் கவனம் செலுத்தினால் தனது அணிக்காக இன்னும் பல வெற்றிகளைப் பெற்றுத் தரலாம்.

மோகித் ஹரிஹரன் :
திண்டுக்கல் அணிக்காக ஆடி வரும் மற்றொரு ஆல்ரவுண்டர் மோகித் ஹரிஹரன். இடது கை பேட்ஸ்மேனான இவர், இரண்டு கைகளிலும் சுழல்பந்து வீசி அசத்தி வருகிறார். சர்வதேச அளவில் இல்ங்கையின் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி வருகிறார்.

மிக அரிதான திறமையாகப் பார்க்கப்படும் இந்த ஆற்றலை இவர் சரியான நெறிப்படுத்தினால் இன்னும் பல உயரங்களை அடையலாம்.
பொய்யாமொழி:
திருச்சி அணிக்காக ஆடி வரும் வேகப்பந்துவீச்பாளர் பொய்யாமொழி.பெரிய நட்சத்திரங்கள் இல்லாத திருச்சி அணியில், இந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இவரது ஸ்லோவ் பந்துகளை எதிர்கொள்ள எதிரணிப் பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். இவரின் ஒரு சில பந்துகள், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோவின் ஆற்றலை பிரதிபலிப்பதாக உள்ளது என வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களைப் போல இன்னும் பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி வரும் டிஎன்பிஎல் தொடர் உண்மையிலேயே நம்ம தமிழ்நாட்டின் கெத்து என்பது நிதர்சனமாகும்.
உங்கள் கருத்தை பதிவிடுக