இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவன் : அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி மாற்றங்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை முதல் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோசமாக விளையாடி தோல்வியடைந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணி, அதனை சரிசெய்யும் வகையில் இந்தத் தொடரில் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் புதிய டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரை சிறப்பாகத் தொடங்க இரு அணிகளும் முனைப்புடன் ஆடுவார்கள்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சுப்மன் ஹில், ஆவேஸ்கான், சுந்தர் என பலரும் காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்கள். இந்நிலையில், பயிற்சியின் போது சிராஜ்ஜின் பவுன்சர் தாக்கியதில் காயமடைந்த மாயங்க் அகர்வால் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதானால் ரோகித் சர்மாவுடன் துவக்கத்தில் யார் களமிறங்குவார்கள் என்ற சந்தேகம் நிலவி வருகிறது
துவக்க ஆட்டக்காரராக கே.எல் ராகுல் களமிறங்குவார் எனத் தெரிகிறது. இவருடன் அறிமுக வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் ஹனுமா விஹாரியின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தாலும், தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் ராகுல் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
மிடில் ஆர்டரில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. காயங்கள் ஏதும் ஏற்படாதபட்சத்தில், புஜாரா, கோஹ்லி மற்றும் ரகானே முறையே நம்பர்3, 4, 5 ஆகிய இடங்களில் களமிறங்குவார்கள். விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் செயல்படுவார்.

ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரில் ஒருவர் மட்டுமே ஆட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. ஆட்டம் நடைபெறும் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் புற்களுடன் கூடிய பச்சை விக்கெட்டுகளில் விளையாட வேண்டி இருப்பதால், ஒரு ஸ்பின்னருடன் மட்டுமே ஆட வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் இரண்டு அரைசதங்கள் விளாசியிருந்தாலும், கவுண்டி போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் ஆடுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்திய அணி நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் எனத் தெரிகிறது. முகமத் ஷமி மற்றும் பும்ராவுடன் மூன்றாவது பந்துவீச்சாளராக சிராஜ் விளையாடுவார் எனத் தெரிகிறது. ஆல்ரவுண்டர் ஸ்லாட் டில் ஆஸ்திரேலியா தொடரில் அசத்திய ஷர்துல் தாக்கூர் களமிறங்குவார் எனத் தகவல்கள் கசிந்துள்ளது.
உத்தேச இந்திய அணி :
ரோஹித் சர்மா ,கே.எல் ராகுல்
புஜாரா, விராட் கோலி, ரஹானே,
பண்ட் (விக்கெட் கீப்பர்), அஷ்வின்/ஜடேஜா, தாக்கூர்
சிராஜ்,முகமது ஷமி, பும்ரா
இங்கிலாந்து உத்தேச அணி:
பார்ன்ஸ், சிப்லி
கிராவ்லி, ரூட், பேர்ஸ்டோ,
லாரன்ஸ், பட்லர்(விக்கெட் கீப்பர்)
ராபின்சன்/சாம்கரன், மார்க்உட், ப்ராடு, ஆண்டர்சன்.
உங்கள் கருத்தை பதிவிடுக