ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க்பால் டெஸ்ட் : ஸ்மிரிதி மந்தனா சாதனை சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது பகலிரவு பிங்க் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா அதிரடி சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதலாவது பகல்-இரவு பிங்க்பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கராரா ஓவலில் நேற்று தொடங்கியது. டாஸில் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங் இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்தியாவின் மந்தனா மற்றும் ஷபாலி வர்மா அதிரடியான தொடக்கத்தை கொடுக்க, இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா பவுண்டரிகளாக விளாசி, ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார்.
இந்திய அணியின் ஸ்கோர் 93ஐ நெருங்கும் போது, ஷபாலி வர்மா 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 44.1 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா, தொடர்ந்து சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் பிங்க்பால் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். 22 ஃபோர்ஸ் மற்றும் 1 சிக்ஸருடன் 127 ரன்கள் குவித்து ஸ்மிரிதி ஆட்டமிழக்க, இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக