டி20 உலகக்கோப்பையை வெல்லப் போவது யார்?? : நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா - இறுதிப் போட்டிக்கான முன்னோட்டம்
டி20 உலகக்கோப்பைத் தொடரில் 44 போட்டிகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இதுவரை இரு அணிகளும் மோதிய முக்கியப் போட்டிகள் , மேட்ச்-அப்கள் மற்றும் அணிகளின் ஒப்பீடு ஆகியவற்றை பற்றி சிறிது அலசலாம்.
ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் தங்கள் பேட்டிங்கைப் பொருத்தவரையில், பெரிய ஃபார்ம்மில் இருக்கிறார்கள் என்று கூற முடியாத நிலையில்தான் உள்ளனர். ஆனால் கோப்பையை வெல்வதற்கு இருவரின் பேட்டிங்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்த வரை வார்னர் சிறப்பாக ஆடத் தொடங்கி இருந்தாலும் மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக மேக்ஸ்வெல் தொடர்ந்து ஏமாற்றி வருவது கவலைக்கிடமாக உள்ளது. அரையிறுதி ஆட்டத்தில், கடைசி கட்டத்தில் ஸ்டோய்னிஸ் மற்றும் வேடின் அபார ஆட்டத்தால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. பந்து வீச்சில் ஜாம்பா நம்பிக்கை அளித்து வருகிறார்.
நியூசிலாந்து அணியில் கப்டில், மிட்செல் சிறப்பாக ஆடினாலும் நடுவரிசை வீரர்கள் சொதப்புகிறார்கள். கடந்த போட்டிகளில் நங்கூரமாக ஆடிய கான்வே காயம் காரணமாக வெளியேறி உள்ளார். பந்துவீச்சில் போல்ட் மற்றும் சவுத்தி அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். இது அந்த அணிக்கு பெரிய பலமாக இருந்து வருகிறது.
இரவு 7 மணிக்குத் துபாயில் தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்காக இருக்கும். ஏனெனில் இங்கு பனிப்பொழிவு காரணமாக இலக்கைத் துரத்தும் அணிக்கே, இந்தத் தொடரில் 100% வெற்றி வாய்ப்பு இருந்துள்ளது.
இந்தத்தொடரில் துபாயில் நடந்த 12 ஆட்டங்களில், 11 ஆட்டங்களில் சேஸிங் அணியே வென்றுள்ளது, இதில் ஒன்பது இரவு ஆட்டங்களும் அடங்கும். இன்னும் சொல்லப்போனால், துபாயில் நடந்த கடைசி 17 இரவு டி20 ஆட்டங்களில், 16ல் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதிப் போட்டியில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி வாகை சூடியது.
ஆஸ்திரேலியா அணியின் அனைத்து வெற்றிகளும் டாஸ் வென்று பீல்டிங் செய்த போது மட்டுமே வந்துள்ளது. டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஒரு போட்டியிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.
நியூசிலாந்து அணி மூன்று முறை முதலில் பேட்டிங் செய்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அவ்விரண்டு போட்டிகளும் மதிய வேளையில் நடந்த ஆட்டங்கள். இரவில் நடந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த போது, நியூசிலாந்தும் தோல்வி அடைந்துள்ளது
இரண்டு அணிகளும் வெவ்வேறு விதமான அணுகுமுறையுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. நான்கு முன்னணி பந்துவீச்சாளர்களுடன் ஆஸ்திரேலியாவும், 5 முன்னணி பந்துவீச்சாளர்களுடன் நியூசிலாந்தும் இதுவரை களமிறங்கி உள்ளன.இறுதிப்போட்டியிலும் அதே பாணியே தொடரும் எனத் தெரிகிறது. இரு அணிகளிலும் ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் கடும் போட்டி நிலவும்.
ஆஸ்திரேலியா உத்தேச அணி :
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்ச் மான்ஷ், மேக்ஸ்வெல், ஸ்மித், ஸ்டோய்னிஸ், வேடு,கம்மின்ஸ்,ஸ்டார்க், ஹசில்வுட், ஜாம்பா
நியூசிலாந்து உத்தேச அணி :
வில்லியம்சன்(கேப்டன்), மிட்செல், கப்டில், செய்பர்ட்,பிலிப்ஸ், நீசம், சான்ட்னர், சவுத்தி, மில்னே,போல்ட், சோதி.
50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடனும், 2019ல் இங்கிலாந்துடனும் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது. அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி பழி தீர்த்த நியூசிலாந்து, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்லுமா??
பொறுத்திருந்து பார்ப்போம்..
நாளை நடைபெறும் போட்டியில் முதல் முறையாக வெற்றிக் கோப்பையை முத்தமிடப் போவது யாரென்று..??
உங்கள் கருத்தை பதிவிடுக